உலகத்தில் இருக்கும் எல்லா நாடுகளிலுமே பெண் குறைவாகத்தான் மதிப்பிடப்படுகிறாள். பல இடங்களில் அவளுக்கென்று சுய அடையாளம் மறுக்கப்படுகிறது. ஓர் ஆணின் வழிதான் அவள் அறியப்படுகிறாள். எவ்வளவுதான் படித்தாலும், நாகரிகத்தில் முதிர்ந்ததாகச் சொல்லிக் கொண்டாலும் அடிப்படையில் பெண் என்றால் ஓர் எள்ளல்தான் அதிகம் இருக்கிறது. தனக்கான ஒரு சிறு உரிமையைக் கூட அவள் போராடித்தான் பெற வேண்டியிருக்கிறது.
சின்னச் சின்னக் கொண்டாட்டங்கள்கூட அவளுக்கு மறுக்கப்படுகின்றன. அவள் அதைக்கூட அறியாமல் வாழ்வதுதான் பரிதாபம். இதனை ஒரே நாளில், ஒரே நிமிடத்தில் எல்லாம் மாற்றிவிட முடியாது. கொஞ்சம் கொஞ்சமாக, அடியடியாகத்தான் முன்னேற இயலும். அதற்கான ஓர் அடியாக ‘அவள் அவன் மேக்கப்’ என்கிற இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது.
கனலி
தமிழ் மீதான ஆர்வமே இவரை எழுத்தாளராக மாற்றியது. ‘சிலரையாவது சிந்திக்க வைப்பதே என் எழுத்தின் வெற்றி’ என்கிற கனலியின் இயற்பெயர் சுப்பு. கவிதைகள், கதைகள் எழுதுவதற்கு ’தேஜஸ்’. பெண்களின் பிரச்னைகளைப் பேசுவதற்கு ‘கனலி’.
அன்பான கணவனும் மகளும் கொண்ட அழகான குடும்பம். ‘என் முதல் வாசகியே மகள்தான் என்பதால் எனக்கு கூடுதல் பொறுப்பு உள்ளது’ என்கிற கனலிக்கு எம்பிராய்டரி, புடவை பெயின்டிங், குரோஷா, சிலம்பம் போன்ற துறைகளிலும் ஆர்வமும் நிபுணத்துவமும் உண்டு.