மகப்பேறு மருத்துவராக இருப்பதால் பெண்கள் சார்ந்த மருத்துவ விசயங்களை தமிழ் மொழியில் எழுத வேண்டும் என்கிற எண்ணத்தின் வெளிப்பாடே இந்த ‘அவள் நலம்’. பெண்களின் உடலியல் மற்றும் பெண்கள் தொடர்புடைய மருத்துவ உண்மைகளை இந்த நூலில் எழுதி இருக்கிறார். வளரிளம் பருவம் தொடங்கி குடும்பக் கட்டுப்பாடு வரையிலான பெண்களின் வாழ்க்கையில் மருத்துவ இடையீடுகள் தேவைப்படும் எல்லா தருணங்களையும் இந்த நூலில் தரவுகளுடன் எளிமையாக எல்லோருக்கும் புரியும் வண்ணம் விளக்கியிருக்கிறார். கர்ப்ப காலம், மகப்பேறு, பாலினத் தேர்வு, பெண்களைப் பாதிக்கும் மார்பக மற்றும் கருப்பை வாய்ப் புற்றுநோய்கள் எனப் பல தளங்களை இந்த நூல் தொட்டுப் பேசுகிறது. மகப்பேறு மருத்துவரின் சிறப்பு ஆலோசனைகள் அடங்கிய பெண்களுக்கான உடனடி, கையடக்க மருத்துவக் குறிப்பு நூலாக இது விளங்குகிறது.
மருத்துவர் அனுரத்னா
மருத்துவர் அனுரத்னா சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியை பூர்வீகமாகக் கொண்டவர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராகப் பணிபுரிந்து வருகிறார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில துணைத் தலைவராக இருக்கும் இவர், கிராமப்புறங்களில் அறிவியலைப் பரப்பும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். தமிழ் மொழிப்பற்று மிக்கவர். மருத்துவ நூல்கள் தமிழ் மொழியில் அதிகம் வெளிவர
வேண்டும், மருத்துவக் கல்வியும் தமிழ் மொழியில் (அவரவர்தம் தாய்மொழியில்) பயிற்றுவித்தல் வேண்டும் எனக் குரல் கொடுப்பவர். அதன் வெளிப்பாடுதான் இந்த ‘அவள் நலம்’ நூலும். இது இவரின் மூன்றாவது நூல்.