ஆண்கள் சகவாசமே வேண்டாம் என்று உறுதிமொழி எடுத்து பெண்களுக்கென்றே ஒரு கிராமத்தை உருவாக்கி தங்களுக்கான சட்டங்களைத் தாங்களே இயற்றிக் கொண்ட உமோஜா பெண்கள்... வலுவான இஸ்லாமிய படிநிலையை கொண்டிருந்தாலும் முக்காடுகள் அணியாத புரட்சிப் பெண்களாக, மாறாக முக்காடுகளை ஆண்களுக்கு பரிசளித்த துவாரெக் பெண்கள்... வாள்கள், சாட்டைகளுடன் சரமாரியாகச் சண்டைப் பயிற்சி மேற்கொள்ளும் குங் ஃபூ பௌத்த பிக்குணிகள்... துணிச்சலாகவும் கடுமையாகவும் போர்க்களத்திலே வீரமங்கைகளாக போராடிய செயேன் பெண்கள்... தந்தையின் உடல்சூட்டிலேயே குழந்தைகள் வளர்ந்துகொண்டிருக்க, வலைகளையும் கத்தியையும் ஏந்தி வேட்டைக்கு ஆயத்தமாகும் ஆகா பழங்குடி பெண்கள்... ஒரு நூற்றாண்டு முழுவதும் பேரரசைப் பாதுகாக்கும் பணியிலிருந்த முழுக்க முழுக்கப் பெண்களால் ஆன ராணுவமான ‘டஹோமி அமேசான்கள்’. இவர்களின் கதைகளைப் படிக்கும்போது புல்லரிக்கும்; பெருமிதம் தலைக்கேறும்!
சித்ரா ரங்கராஜன்
சென்னையில் பிறந்தவர். கட்டிடக் கலை மற்றும் உட்புற வடிவமைப்பாளராக சென்னையில் தன் கணவருடன் ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதுவதை ஆர்வமாகக் கொண்டுள்ளவர். இவருடைய ஓவியங்கள் பல கண்காட்சிகளில் இடம்பெற்றிருக்கின்றன. புத்தகங்களுக்குப் படங்கள் வரைவதிலும் நாட்டம் கொண்டவர்.
சமூக ஆர்வலர். பெண்ணியச் சிந்தனைகளில் மிகுந்த ஆர்வமுள்ளவர். ஹெர் ஸ்டோரிஸ் இணைய இதழில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருகிறார். ‘அகம் - பெருவெளியில் தனியொருவள்’ என்ற தொகுப்பு நூலில் தன் முதல் கட்டுரையை எழுதினார். ஹெர் ஸ்டோரிஸ் நடத்தும் நேர்காணல் மற்றும் நூல் திறனாய்வு நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறார். ஒருவரின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதில் எழுத்தாளருக்கு முக்கியப் பங்குண்டு என்பது இவருடைய வலுவான கருத்து.