முன்பின் அறிமுகமில்லாத மீரா, முனைவர் கோமதி, Dr. நாகஜோதி மற்றும் காளி ஆகிய நான்கு பெண்கள் தொடங்கிய ‘முச்சந்துமன்றம்’ ட்விட்டர் ஸ்பேஸ் தளத்தில் 3 வருடங்களுக்கும் மேல் புத்தகவாசிப்பும் கலந்துரையாடலும் நிகழ்த்தி வருகிறது. புத்தக வாசிப்பினூடே இந்தச் சமூகத்துடன் முச்சந்துமன்றம் நிகழ்த்தி வந்த உரையாடலின் நீட்சியே இந்தச் சிறுகதை முயற்சி. பெண்களின் அசைவுகளைக் கட்டுப்படுத்தும் தளைகளை உணர்த்துவதும், அதனின்று வெளியேற உந்துதல் அளிப்பதும், அவற்றை வெட்டி வீழ்த்த ஆயுதங்களை அடையாளம் காட்டுவதும், இந்தப் பயணத்தினூடே சிரிப்பைத் தவறவிடாமல் இருக்க நினைவுறுத்துவதும் முச்சந்துமன்றத்தின் நோக்கம்.
‘அவள் இவள் உவள்’ வாழ்வின் திசைக்கோல் அவள்களிடமில்லாதிருப்பது இயற்கைக்கு முரணானது. இந்த முரண்கள் தான் கதையாசிரியர்கள் மீரா, முனைவர் கோமதி, காளி, Dr.நாகஜோதி நால்வரும் தேர்ந்தெடுத்துள்ள கதைகளின் மையப்புள்ளியாயிருக்கிறது. ரயில் போல வேகமாகத் தடதடத்து ஓடிக்கொண்டிருக்கும் ஆண்மைய உலகின் கண்களுக்குப் புலப்படாத கணங்களை நெருக்கமான காட்சிகளாக சிருஷ்டித்து ‘நீ வாழும் லட்சணத்தைப் பார்’ என முகத்தில் அறையும் கதைகள் ஒவ்வொன்றும். இந்தக் கதைகளைப் படிக்கப் படிக்கப் பெண்களின் அவலமும் தத்தளிப்பும் மட்டுமல்ல, யதார்த்தத்தின் வெளிச்சத்தில் சமூகத்தின் போலி விழுமியங்களும் மீறமுடியாதபடி அது பெண்களைச் சிறைவைத்திருக்கும் நீதிக்குப் புறம்பான கட்டுக்கோப்புகளும் அற எழுச்சியையும் மீறலையும் கோருகிறது. ட்விட்டர் ஸ்பேஸில் இவர்களது புதிய தொடக்கமான முச்சந்துமன்றத்தில் 125 புத்தகங்களுக்கு மேல் வாசித்து விவாதித்து, இதோ கதைகளுடன் வாசகர்களிடம் வந்திருக்கிறார்கள். இந்த நான்கு பெண்களும் நான்கு தீக்குச்சிகள். அடக்குமுறைக்கு எதிரான நெருப்பு இவர்களின் படைப்புகளில் தழல்கிறது.
- ஸர்மிளா ஸெய்யித்