மாற்றத்துக்கான முதல் படி வீடுகளிலிருந்தும் கல்விக் கூடங்களிலிருந்தும்தான் தொடங்க வேண்டும். அதுதான் சமூக மாற்றதுக்கும் இட்டுச் செல்லும் பாதையாக இருக்கும். பசித்தால், பிடித்தால் கூடுதலாக ஒரு தோசை சாப்பிடலாம் என்கிற நம்பிக்கையை ஒரு பெண் குழந்தைக்கு தரும் சமூகம்தான் உண்மையிலேயே மேம்பட்ட சமூகம். அந்த வகையில், வகுப்பறைகளிலேயே சமத்துவத்தை ஆழமாகவும் அதே நேரம் அவர்களது மொழியிலும் அறிமுகப்படுத்தும் இந்த நூல், எளிமையாகத் தோன்றினாலும் மிக மிக முக்கியமான ஒரு முயற்சி. ஒவ்வொரு நூலகத்திலும் வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகம் இது. பெண் குழந்தைகளுக்கு மட்டுமன்றி சமத்துவம் பற்றிய புரிதலின் பொருட்டு அனைத்துக் குழந்தைகளுக்கும், அவர்களுடன் உரையாடலை நிகழ்த்தும் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இந்த நூல் போய் சேர வேண்டும்.
சாந்த சீலா கடந்த 18 ஆண்டுகளாக ஆசிரியராகப் பணிபுரிகிறார். கும்முடிப்பூண்டியை அடுத்த பூவலை கிராமத்தின் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர். பேருந்து வசதி கூட சரியாக இல்லாத இந்த ஊரிலேயே தங்கி, பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு கல்வியறிவுக்கு வழிகாட்டுகிறார்.இவர் மற்றும் இந்தப் பள்ளியின் ஆசிரியர்களின் கூட்டுழைப்பால் இடைநிற்றல் குறைந்திருக்கிறது. பள்ளி மேலாண்மைக் குழுவின் ஆசிரிய உறுப்பினராகவும் இருக்கிறார். கல்வியின் நோக்கமான படைப்பாற்றல் வெளிப்பட குழந்தை மையக் கல்வியே தேவை, அது அமைய செயலாற்றி வருகிறார்.விளிம்புநிலைக் குழந்தைகளும் மைய நீரோட்டத்தில் இணைய வேண்டும் எனச் செயல்படும் அரசுப் பள்ளி ஆசிரியர். ‘குழந்தைகளைக் கொண்டாடுவோம்’ கல்வி இயக்கம், குழந்தைநேயப் பள்ளிகள் கூட்டமைப்பு போன்ற அமைப்புகளில் செயலாற்றி வருகிறார்.