‘எனக்கு எல்லாம் தெரியும்’ என்றத் தொனியிலல்ல – ‘வாங்க பேசலாம்’ என்றத் தொனியில் அமைந்தது இப்புத்தகத்தின் சிறப்பு. தமிழ் வாசகர்களுக்கு இது ஓர் புதிய அனுபவமாக நிச்சயமாக இருந்திருக்கும். அக்கா ஒருவர் நம் வீட்டிற்கு வந்து நம்முடன் அமர்ந்து கதை பேசுவது போல மொழி நடை. மாற்றுச்சிந்தனை பேசும்போதுகூட எந்த விதத் தயக்கமோ அச்சமோ இல்லை – இயல்பாகப் பேசப்படுகிறது. வாசிக்கத்தெரியாதவர்கள்கூட எளிதில் மற்றவர் வாசிக்க கேட்டுப் புரிந்துகொள்ளும் வண்ணம் உள்ளது. ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு கடிதமாக எழுதப்பட்டுள்ளது. அன்னாள் சத்தியநாதன் கடித வடிவத்தைக் கையாண்ட விதம், வாசிக்கும் நமக்கு அவரோடு ஒரு நெருக்கத்தை ஏற்படுத்துகிறது. நம்பகத்தன்மையை அதிகரிக்கிறது. அவர் சான்றாக எடுத்துக்கொண்ட ஆங்கிலப் புத்தகத்தின் கட்டுரை வடிவத்திலிருந்து வேறுபட்டு இந்த வடிவத்தை தேர்ந்தெடுத்தது அன்னாளின் அறிவாற்றலுக்குச் சான்று. பெண் எழுத்தாளர்கள் தமிழ் மண்ணில் அதிகம் இல்லாத காலத்தே ‘நல்ல தாய்’ புத்தகம் பெண் எழுத்தாளாரால் எழுதப்பெற்றது சாதனையே. ஆனால் இன்று தமிழநாட்டில் ‘நல்ல தாய்’ மறக்கப்பட்ட ஓர் படைப்பு. இப்போது ஹெர் ஸ்டோரிஸ் வழியாக இப்புதையலைத் தோண்டி வெளிக்கொண்டு வருவதில் மகிழ்ச்சி.
– ரோடா அலெக்ஸ்
அன்னாள் சத்தியநாதன்
Anna Satthianadhan
நான்கு தலைமுறை கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்தவர் அன்னா சத்தியநாதன். கல்வியில் சிறந்து விளங்கிய அன்னாள், சத்தியநாதன் என்ற வேத போதகரை மணந்தார். கடாட்சபுரத்தில் பெண்களுக்கான சிறு பள்ளி ஒன்றைத் தொடங்கினார். தமிழ்ப்பெண் ஒருவர் தொடங்கிய முதல் பள்ளி இதுவே. அதன்பின் சென்னையில் ஆறு பெண்கள் பள்ளிகளைத் தோற்றுவித்து நிர்வகித்தார். 1862ம் ஆண்டு இவர் எழுதிய ‘நல்ல தாய்’ என்ற உரைநடை நூல் வெளியானது. தமிழ்ப் பெண் ஒருவர் எழுதி அச்சில் வெளியான முதல் உரைநடை நூல் இதுவே. ஸெனானா மிஷன் எனப்படும் பெண்களுக்கான தனிப்பட்ட மிஷன் பணியையும் இவர் சென்னையில் தொடங்கி நடத்தினார்.