காத்திரமான மொழியில் ஹேமா எழுப்பியிருக்கும் கேள்விகள் சமூகத்தின் ஆழ் மௌனத்தைக் கேள்விக்குரியாக்குபவை. சமூக நீதி குறித்த இவரது தெளிவான சிந்தனையின் போக்கினையும் இந்தக் கட்டுரைகள் தெளிவாகவும் உரக்கவும் சொல்கின்றன. காலம் காலமாகப் பெண்களின் மீது, பண்பாடு என்ற பெயரில் சுமத்தப்பட்டு வரும் பல்வேறு விஷயங்களையும் வெளிப்படையாகப் போட்டுடைக்க ஹேமாவின் விசைப்பலகை தவறுவதில்லை.
- ஆசிப் மீரான்
எழுத்திலும் பேச்சிலும் தன்னுடைய இருப்பையும் இயல்பையும் வெளிப்படுத்திவரும் ஹேமா இந்த நூல்மூலம் பல விஷயங்களைப் பார்வைக்குத் தந்திருக்கிறார். ஒரு பெண், இந்த உலகத்தில் படுகின்ற பாடுகளைப் புரிந்துகொண்டு பயணிப்பதில்தான் வெற்றி இருக்கிறது. அப்பயணத்தில் எதிர்கொள்ளும் சவால்களை எப்படியெல்லாம் சமாளிக்கலாம் என்பதற்கான வரைவையும் இந்நூலில் தந்திருக்கிறார். ஒரு சம்பவத்தையோ அனுபவத்தையோ சொல்லிவிட்டு அதன் வழியே ஹேமா சில வார்த்தைகளை எழுதுகிறார். அவை கவித்துவமான தருணங்களைத் தருவிக்கின்றன
- யுகபாரதி
ஹேமா
‘முழுவல்’ எனும் கவிதைத் தொகுப்பின் மூலம் எழுத்துலகுக்கு அறிமுகமானவர். யோகா ஆசிரியரான இவர் கேரளத்தின் கொச்சியில் வசித்து வருகிறார். வர்த்தகப் பட்டப்படிப்பை முடித்த இவர், யோகாவில் ஆய்வியல் நிறைஞருமாவார். இப்போது சட்டம் படித்துக் கொண்டிருக்கிறார்.
பெரியாரிய கருத்துகளால் ஈர்க்கப்பட்ட இவர், பெண்ணியம் சார்ந்த கருத்துகளைத் தொடர்ந்து பேசியும் எழுதியும் வருகிறார். வாசிப்பதன் மூலமும், தான் வாசித்ததை காணொலிகள் வாயிலாகப் பிறருக்குச் சொல்வதன் மூலமும் ஒரு புதிய வெளிச்சத்தைப் பாய்ச்ச முற்படுகிறார்.
‘இந்த வாழ்வின் சமத்துவமற்ற படிநிலைகளைக் காணும்போது மனதுக்குள் இயல்பாகவே எவர் ஒருவருக்கும் வரும் ரெளத்திரமே, இந்தக் கட்டுரைகளை எழுத வைத்தது. கொஞ்சம் சிந்திப்பதால் வாழ்கிறேன் என்பதைத் தவிர சொல்வதற்கு வேறொன்றும் இல்லை’ என்கிறார் ஹேமா.