21-ம் நூற்றாண்டில் பெண்கள் முழு சுதந்திரம் அடைந்து விட்டார்கள் என்பது பெரும்பான்மையோர் கருத்தாக உள்ளது. மேலோட்டமாகப் பார்க்கும் போது, இக்கூற்று உண்மை போலவே தோன்றும். உண்மையில் பெண்களின் நிலை என்ன என்பதை இந்நூலில் இடம்பெற்றுள்ள சிறு கட்டுரைகள் விளக்குகின்றன. இவை, படிப்பவர்களின் அகக்கண்களைத் திறக்கும் என்பது உறுதி. இக்கட்டுரைகளைப் படிப்பவர்களுக்கு ஒன்று கூறிக் கொள்கிறேன். இவை ஆண்களை எதிர்க்கும் கட்டுரைகள் அல்ல. சமூகத்தில் காணப்படும் வாழ்வியல் நடைமுறைகளை முன்வைக்கும் கட்டுரைகளே. உள்ளதை உள்ளவாறு புரிந்து கொள்ள வேண்டும் என்பதே என் வேண்டுகோள். புரிந்து கொண்டால் சமூக மாற்றம் ஏற்படும்.
இரா.பிரேமா
தமிழக அரசின் மகாகவி பாரதியார் விருது பெற்ற இரா.பிரேமா, தமிழ்ப் பேராசிரியர்; பெண்ணிய ஆர்வலர்; எழுத்தாளர்; ஆய்வாளர். இவர், 27 ஆண்டுகள் கல்லூரிப் பேராசிரியர் பணியிலும், நான்கு ஆண்டுகள் கல்லூரி முதல்வர் பணியிலும், 30 வருடங்கள் ஆய்வுப் பணியிலும் ஈடுபட்டவர். இவர் 23 நூல்களையும், 250-க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவர் பதிப்பித்த நூல்கள் 3. இவர் எழுதிய ‘பெண்ணியம்’ என்ற நூல் 12 பதிப்புகளைக் கண்டுள்ளது. இவரது பெண்ணிய நூல்கள், தமிழகப் பல்கலைக்கழகங்களிலும், பல தன்னாட்சிக் கல்லூரிகளிலும், பாண்டிச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்திலும் பாடநூலாகவும் நோக்கு நூலாகவும் எடுத்தாளப்படுகின்றன. இவரின் இரண்டு நூல்களை சாகித்ய அகாடமி வெளியிட்டுள்ளது. இவரின் இரண்டு நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவர இருக்கின்றன. இலக்கிய வட்டத்தில் ‘பெண்ணியம் பிரேமா’ என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.