பாலினச் சமத்துவத்தைப் பெண்களின் பிரச்னையாகவோ, ஆண்களுக்கு எதிரானதாகவோ பார்ப்பது ஒரு குறுகிய பார்வை. பெண்களுக்காக பெண்ணால் எழுதப்பட்டது என்பதைத் தாண்டி, ஆண் - பெண் உறவுச் சிக்கல்களைப் பற்றிப் புரிந்துகொள்வதற்காக ஒவ்வோர் ஆணும் இந்த நூலைப் படிக்க வேண்டும்.
வெறும் பிள்ளைபெறும் எந்திரங்களாக மட்டுமே நடத்தப்படாமல், கல்வியும் வாய்ப்புகளும் உறுதி செய்யப்பட்டதால் கடந்த மூன்று நான்கு தலைமுறைகளில் குடும்ப வாழ்க்கையிலும் சமூக வாழ்க்கையிலும் பெண்கள் ஆற்றி இருக்கும் பங்கை நினைத்துப் பார்த்தால், பாலினச் சமத்துவத்தால் ஆண்களுக்குக் கிடைக்கும் நன்மைகள் புரியும்; செல்ல வேண்டிய திசையைப் பற்றிய தெளிவு பிறக்கும்.
அந்த வகையில் ஆண், பெண், மாற்றுப் பாலினத்தவர் என்கிற பாகுபாடுகளைக் கடந்து அனைவரும் படிக்க வேண்டிய கருத்துகளைச் சுருக்கமான, தெளிவான, நட்பார்ந்த நடையில் சொல்லும் நூல் இது!
கீதா இளங்கோவன்
‘மாதவிடாய்’, ‘ஜாதிகள் இருக்கேடி பாப்பா’ போன்ற பெண்ணியக் களத்தின் ஆழ அகலத்தை வெளிக்கொணரும் ஆவணப் படங்களை இயக்கியிருக்கிறார். சமூகச் செயற்பாட்டாளர். சிறந்த பெண்ணிய சிந்தனையாளர். அரசுப் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற தோழர் கீதா, சமூக வலைத்தளங்களிலும் தன் காத்திரமான ஆக்கபூர்வமான எழுத்தால் சீர்திருத்த சிந்தனைகளைத் தொடர்ந்து விதைத்து வருகிறார். இவரது முதல் நூலான ‘துப்பட்டா போடுங்க தோழி’ பல பதிப்புகளைக் கண்டுள்ளது, தொடர்ந்து பலராலும் விரும்பி வாசிக்கப்படுகிறது. அண்மைக் காலத்தில் வெளியான மிக முக்கியமான நூல் எனக் கொண்டாடப்படுகிறது.