இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் சரோஜா ராமமூர்த்தியின் கதைகள் எளிமையானவை, நேரடியானவை. போலிப்பாசாங்குகள் அற்றவை. மிகையான சொற்கள், விவரிப்புகள் தவிர்த்தவை. தன் சம காலத்தை ஒட்டிக் குடும்பக் களத்தையே பெரும்பாலான கதைகளில் முன்னிலைப்படுத்தியிருந்தாலும், குடும்பம் தாண்டிய பார்வைகளையும் அவரது சில கதைகள் தவற விடாமல் பதிவு செய்திருக்கின்றன. ஒரு பார்வையாளராக - தன்னைச் சுற்றி இயங்கும் உலகை அதன் வேறுபட்ட வாழ்க்கைமுறைகளை அவதானித்தபடி, ஒரு வழிப்போக்கரைப்போல - உள்ளதை உள்ளபடி சொல்லிக்கொண்டே செல்பவை அவரது கதைகள். அவர் பதிவு செய்த வாழ்க்கையும் அதன் மதிப்பீடுகளும் இன்று மாறியிருக்கலாம். ஆனால், அந்த மாற்றத்துக்கான அடித்தளம் அமைத்ததில் முன்னோடிப்பெண் எழுத்துகளுக்குத் தவிர்க்க முடியாத மிகச்சிறிய ஒரு பங்காவது இருப்பதை மறுத்துவிட முடியாது.
சரோஜா ராமமூர்த்தி
சரோஜா ராமமூர்த்தி (ஜூலை 27, 1921 - ஆகஸ்ட் 8, 1991) நவீனத்தமிழ் எழுத்தாளர், காந்தியவாதி. அறுநூறுக்கும் அதிகமான சிறுகதைகள் மற்றும் நாவல்களை எழுதியுள்ளார். 1943ம் ஆண்டு எழுத்தாளர் து.ராமமூர்த்தியை மணந்துகொண்டார். ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார். ‘பாரதி’ என்ற பெயரில் கையெழுத்து இதழ் நடத்தினார். சுதேசமித்திரன், ஆனந்தவிகடன், கல்கி, மங்கை, சக்தி, கலைமகள், நவசக்தி, காதல், அமுதசுரபி, தினமணிகதிர், வீரகேசரி போன்ற இதழ்களில் சிறுகதைகள் எழுதினார். இவரது நூல்களை தமிழ்நாடு அரசு 2010 ம் ஆண்டு நாட்டுடைமையாக்கியது.