இருபத்தியோராம் நூற்றாண்டிலும் வர்க்க, இன பேதமின்றி மத்தியதர குடும்பப் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளைச் செட்டிநாட்டின் மொழி வழக்கில் பேசியிருக்கும் இக்கதைகள் செட்டிநாட்டுப் பெண்கள் எதிர்கொள்ளும் பிரத்யேகப் பிரச்னைகளால் நெய்யப்பட்டுள்ளன.
செட்டிநாட்டுக் கோட்டை வீடுகள், உணவுவகைகள், சொல்வழக்கு, உறவு முறைகள், சுவீகாரம், திருமண நடைமுறைகள், கணவனை இழந்த முதிய பெண்களின் தனிமை, உடல்நலிவு, கணவன் மனைவி பந்தம், குழந்தைகளுக்கும் பெற்றோருக்குமான பிணைப்பு, ஆண்களின் செயல்பாடுகள், திருமணம் தாண்டிய உறவுகள், சில நேரங்களில் பெண்களே பெண்களுக்குப் பிரச்னை ஆகுதல், எப்போதும் தங்களிடம் பணிபுரிவோரிடம் கொள்ளும் நம்பகத்தன்மையும், ஒரு சிலரிடம் திடீரென ஏற்படும் நம்பிக்கையின்மையும் எனக் கடந்த இரு நூற்றாண்டுக் காலச் செட்டிநாட்டு வாழ்வியலை ஆவணப்படுத்திய விதத்தில் ‘மற்றும் சில செட்டிநாட்டுக் கதைகள்’ எனும் இந்நூல் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
தேனம்மை லெக்ஷ்மணன்
கவிஞர், எழுத்தாளர், வலைப்பதிவர், சுதந்திரப் பத்திரிகையாளர். ஏழு வலைப்பூக்களில் எழுதி வருகிறார். சாதனை அரசிகள், ங்கா, அன்ன பட்சி, பெண்பூக்கள், சிவப்புப் பட்டுக் கயிறு, தேனம்மை லெக்ஷ்மணனின் படைப்புலகம், விடுதலை வேந்தர்கள், பெண் மொழி, காதல் வனம், மஞ்சளும் குங்குமமும், பெண் அறம், கீரைகள், ஆத்திச்சூடிக் கதைகள், பெண்ணின் மரபு, நன்ெனறிக் கதைகள் இரண்டு தொகுதிகள், வளையாபதி & குண்டலகேசி மூலமும் உரையும், நாககுமார காவியம், நீலகேசி, ஒப்பற்ற இந்தியப் பேரரசிகள், கோலங்கள், மகாபாரதக் கதைகள், சாணக்ய நீதி, சோகி சிவா ஆகிய 24 நூல்களின் ஆசிரியர். அமேஸானில் இவருடைய 57 நூல்கள் வெளியாகி உள்ளன.
இவருடைய கவிதைகள் ஆங்கிலம், கன்னடம், மலாய் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அன்ன பட்சி நூலுக்காக ‘அரிமா சக்தி’ விருது பெற்றவர். சோகி சிவா நாவலுக்காகக் கம்பம் இலக்கியப் பேரவையின் பரிசு வென்றவர். ரியாத் தமிழ்ச்சங்கத்தின் கவிதைப் போட்டியில் இருமுறையும் சிறுகதைப் போட்டியில் ஒரு முறையும் பரிசு பெற்றவர். இவை தவிர 25-க்கும் அதிக விருதுகளால் சிறப்பிக்கப்பட்டவர்.