இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் பெண்களில் சிலருக்கு விடுதலைக்குப் பிறகான இந்தியாவில், தங்கள் வாழ்நாளுக்குள் விருது, பதவிகள் கிடைக்கின்றன. சிலருக்கு நினைவு தபால்தலைகள் வெளியிடப்படுகின்றன. இப்படியாக அவர்களின் தியாகத்துக்கு ஏதோ ஒரு வகையில் அங்கீகாரம் பெற்று விடுவது ஆறுதலளிக்கிறது. ஆனால், சிலர் அங்கீகாரம் பெறாமலும் இறந்திருக்கின்றனர். எத்தனையெத்தனையோ விடுதலைப் போராட்ட தியாகிகளின் வரலாறுகள் - குறிப்பாக பெண் தியாகிகளின் வரலாறுகள் எழுதப்படாமலேயே போயிருக்கின்றன. எழுதப்பட்டவையும் படிப்போரோ கேட்பாரோ தேவைப்படுவோரோ இன்றி முடங்கிக் கிடக்கின்றன. இவர்களைப் போன்று அச்சிலேறும் வாய்ப்பு கூட வாய்க்கப் பெறாமல் வாழ்வை தியாகம் செய்த நிறைய பெண்களையும் நாம் கேள்விப்படுகிறோம். அவர்களை முடிந்தவரை ஆவணப்படுத்தும் பெரு முயற்சியில் இறங்கியிருக்கிறார் கவிஞர் உமா மோகன்.
உமா மோகன்
புதுச்சேரியில் வசிக்கும் ஊடகவியலாளர் உமா மோகன் (அகில இந்திய வானொலி அறிவிப்பாளர்) மாணவர்களுடனும், மகளிருடனும் இயங்குவதில் விருப்பம் கொண்டவர். அவரது சிறுகதைத் தொகுதிக்காக கலை இலக்கிய பெருமன்ற விருதினையும், கவிதைகளுக்காக சௌமா அறக்கட்டளை உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.