இந்தப் புத்தகத்தின் பக்கங்களுக்குள் நாம் நுழையும்போதே, நம் நெஞ்சுக்குள் விடுதலை வேள்விக்கான வெப்ப உணர்வு பரவுவதை மறுக்க முடியாது. நாம் அந்தக் காலத்தில் இருந்திருந்தால் எப்படி இருந்திருப்போம், என்னென்ன உணர்வுகள் ஏற்பட்டிருக்கும் என்றெல்லாம் என் உள்ளம் என்னை விடாது துரத்தியது. இதைப் படிக்கும் ஒவ்வொருவரும் காலத்தைத் திருப்பி பார்ப்பார்கள். ‘ம்... நாம் அந்தக் காலத்தில் இருந்திருந்தால் இப்படிச் செய்திருப்போமா’ என்கிற ஒரு வினா அவர்களின் மனத்திலும் எழும்.
உமா மோகனின் இந்த முயற்சியை இந்திய மக்களுக்காக - குறிப்பாக தமிழ் மக்களுக்காக அவர் நடத்திய விடுதலை வேள்வி என்றே நான் கருதுகிறேன். இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள பெண்களைத் தேடித் தேடி, அற்புதமான அரிய தகவல்களைத் தொகுத்து, அவர்கள் வாழ்க்கையை எளிமையான மொழியில் பதிவு செய்துள்ள உமா மோகன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
இந்த நூல் தமிழ் நாட்டிலும் புதுவையிலும் உள்ள அனைவராலும் - குறிப்பாக அனைத்துப் பெண்களாலும் படிக்கப்பட வேண்டும். அதோடு, ஆர்வமுள்ளோர் இந்த நூல் வரிசையை ஆய்வுக்கு உட்படுத்தி முனைவர் பட்டம் பெற வேண்டும் என்பதே என்னுடைய அவா!
உமா மோகன்
புதுச்சேரியில் வசிக்கும் ஊடகவியலாளர் உமா மோகன் (அகில இந்திய வானொலி அறிவிப்பாளர்) மாணவர்களுடனும் மகளிருடனும் இயங்குவதில் விருப்பம் கொண்டவர். 12 கவிதைத் தொகுப்புகள் உள்பட இவரது பல நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது சிறுகதைத் தொகுதிக்காக கலை இலக்கிய பெருமன்ற விருதினையும், கவிதைகளுக்காக சௌமா அறக்கட்டளை உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றவர். புதுச்சேரி அரசின் கம்பன் புகழ் இலக்கிய விருது வென்றவர்.