மூன்று தலைமுறைகளாக ‘ரிலே கேம்' போல ஓர் ஆழமான கருத்து, லட்சியம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பது இந்த நாவலின் மற்றுமொரு சிறப்பு. இவர்களைப் பார்க்கும்போது லட்சியமே வாழ்வாக சமுதாயத்தில் வாழையடி வாழையாய் வாழும் மருத்துவர் கூட்டம் இன்னும் வளர்ந்து கொண்டே வரும் என்னும் நம்பிக்கை துளிர்விடுகிறது. அது தந்த நிறைவு சொல்லில் அடங்காதது. சமூகப் பொறுப்புணர்ச்சிமிக்க நூலாசிரியரின் சொல் நயம் கதையை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. அதில் திருவாசகத்தை இணைத்தது மணிமகுடமாக அமைந்திருக்கிறது.
எம்.ஏ.சுசீலா
எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான எம் ஏ சுசீலா, மதுரையிலுள்ள பாத்திமா கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றிருப்பவர். நான்கு சிறுகதைத் தொகுப்புகள், ‘யாதுமாகி’, ‘தடங்கள்’ என்ற இரண்டு நாவல்கள், ஆறு கட்டுரைத்தொகுப்புகள், ஃபியதோர் தஸ்தயெவ்ஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்’, ‘அசடன்’, ‘வெண் இரவுகள்’ ‘சிறுமைகளும் அவமதிப்புகளும்’ உள்ளிட்ட 11 மொழிபெயர்ப்புகள் ஆகியவை இவரது பங்களிப்புகள். ‘அசடன்’ நாவலின் மொழிபெயர்ப்புக்காக 2013ம் ஆண்டில் கனடா இலக்கியத் தோட்ட விருது, நல்லி- திசை எட்டும் விருது, எஸ் ஆர் எம் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராயம் வழங்கும் ஜி யூ போப் விருது ஆகிய மூன்றும் இவருக்கு வழங்கப்பட்டன. கோவை விஜயா வாசகர் வட்டம் வழங்கும் மொழியாக்கத்துக்கான விருது 2022ல் இவருக்கு அளிக்கப்பட்டது.