ஆணாதிக்க மதிப்புகளின் மைய இயக்கியாக மதம் எப்படிச் செயற்படுகிறது, எத்தகைய விளைவுகளை உருவாக்குகிறது என்பதற்கு குடும்பங்களிலும் சமூகங்களிலும் பெண்களே கண்ணாடி. முஸ்லிம்களாயினும், முஸ்லிமல்லாதவர்களாயினும் ஆணாதிக்க விழுமியங்களை பரவலாக்கப் பெண்கள் மீதே அழுத்தங்களைப் பிரயோகிப்பர். ஆணாதிக்க விழுமியங்களுக்கு மதம் கூடுதல் ஆதரவையும் எளிய காரணத்தையும் கொண்டிருக்கிறது. ஆணாதிக்கமும் மதமும் சமூகங்களில் எந்த வகையிலும் தற்செயலானதோ சிறியதானதோ நிகழ்வு இல்லை.
சாரா அபூபக்கர்
இவரது முதல் நாவலான சந்திரகிரி தீரதள்ளி (சந்திரகிரி ஆற்றங்கரையில்) பெண்களுக்கு எதிரான முத்தலாக் முறையைக் கேள்விகேட்டது. இதன் விளைவாக சொந்த மதமே சாராவை ஒதுக்கியது. 1985 ஜனவரியில் புத்தூரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றுக்குப் பேச வந்த சாராவை இஸ்லாமிய ஆண்கள் சூழ்ந்துகொண்டு தாக்க முயன்றனர். இந்த முயற்சி அவரை இன்னும் உறுதியாக்கியது. அதே ஆண்டு அவரின் கணவர் இறந்துபோனார். ஆனால், ஷாஹ்பானோ வழக்கு நாடுமுழுக்கப் பேசப்பட, இஸ்லாமியப் பெண்களுக்கான குரலாக தான் மீண்டெழவேண்டும் என மீண்டும் எழுதத் தொடங்கினார்.
பெண்களுக்கு எதிராக இஸ்லாமிலுள்ள சட்டதிட்டங்களை எதிர்த்துக் கேள்வியெழுப்பினார். தொடர் குழந்தைப்பேறு, பிள்ளைகளால் கைவிடப்படுதல், மதக் கலவரம், ஏழ்மையின் பிரச்னைகள், லஞ்சம் உள்ளிட்ட பல பொருண்மைகளில் இவரின் படைப்புகள் அமைந்தன. இஸ்லாமிய அடிப்படைவாதத்தையும் இவர் தன் நாவல்களில் கேள்விக்கு உட்படுத்துகிறார்.