வெளிநாடுகளில் இருப்பதைப்போல் பெண்களுக்கான அரங்கு (Hall of Fame) உள்ள பெண்கள் அருங்காட்சியகம் ஒன்று உருவானால் நிவேதிதா நூல்களில் உள்ள அனைத்துப் பெண்களும் அதில் இருப்பார்கள். பல முயற்சிகள் எடுத்து, பலர் உதவியுடன் விடாமல் தரவுகளைத் தேடி, பலர் பார்வைக்குப் பொதுவெளிக்கு இவர் கொண்டுவந்திருக்கும் பல பெண்கள் இந்த நூலில் உண்டு. திரைப்படம், பல துறை மருத்துவம், இசைக் கலை, நாட்டியம், எழுத்து, திரைப்பாடல், கல்வி, விமானப் படை பணி, உளவுத் தொழில், பட்டயக் கணக்கு, செலவு மற்றும் மேலாண்மைக் கணக்கு, செவிலியர் பணி என்று பல துறைகளில் செயல்பட்ட பெண்களைப் பற்றிய எல்லாத் தகவல்களையும் உயிர்ப்புள்ள மொழியில் கூறுகிறார்.
நாம் அறிந்த எழுத்தாளரான திலகவதியுடன் நிவேதிதா செய்த மிக நீண்ட நேர்காணல் அவரைப் பற்றிய பல புதுத் தகவல்களைத் தருகிறது. அவரை மனம் திறந்து பேச வைக்கிறார் நிவேதிதா. அவரும் எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் தன் வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்கிறார். மிகவும் மனத்தை நெகிழ்த்தும் நேர்காணல் இது.
- அம்பை
நிவேதிதா லூயிஸ்
வரலாறு, தொல்லியல், பண்பாடு உள்ளிட்ட தளங்களில் கடந்த ஏழாண்டுகளாக இயங்கி வருபவர். முன்னாள் மத்திய அரசுப் பணியாளர். உள்ளூர், மறைக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுபான்மைச் சமூகத்தின் வரலாற்றை முனைப்போடு மக்களிடம் கொண்டு செல்பவர். சென்னை நகரில் தொடர்ச்சியாக மரபு நடைகள், உலாக்கள், வரலாற்று சொற்பொழிவுகள் நிகழ்த்தி வருகிறார். ‘முதல் பெண்கள்’, ‘ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை’, ‘வடசென்னை வரலாறும் வாழ்வியலும்’, ‘சிந்து சமவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்ட கதை’, ‘ மகிழ்ச்சியின் தேசம்’(மின்நூல்), ‘அறியப்படாத கிறிஸ்தவம்’, ‘அம்மாக்கண்ணுவுக்கு நீலனைப் பிடிக்காது’, ‘கலகப் புத்தகம்’ உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார். இவரது ‘வடசென்னை வரலாறும் வாழ்வியலும்’ நூல் 2022-ம் ஆண்டுக்கான எஸ்ஆர்எம் தமிழ்ப் பேராயத்தின் புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருதும் தமுஎகச-வின் தொன்மைசார் நூலுக்கான தோழர் கே.முத்தையா விருதும் வென்றுள்ளது. இவர் Her Stories நிறுவனத்தின் இணை நிறுவனர். அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் வாரந்தோறும் நடத்திவரும் Her Stories Conversations நிகழ்ச்சிகளுக்காக 2021-ம் ஆண்டு லாட்லி ஊடக விருது பெற்றுள்ளார். பெண் படைப்பாளர்கள் நூல்களை இவரது Her Stories அமைப்பு வாயிலாக வெளியிட்டு வருகிறார்.