பொதுவாக ஆண்கள் தமது எழுத்து வகைமைகளில் புள்ளிவிவரங்களும் உலகைப் பற்றிய தர்க்க நியாய விவாதங்களும் என உலகையே வலம் வருவார்கள். ஆனால், தன்னைப் பற்றி, தனது கருத்தில் தன்னை விவாதத்துக்கு உட்படுத்தி எதுவும் சொல்ல மாட்டார்கள்.
தான் சொல்வதெல்லாம் மற்றவர்களுக்குதானே ஒழிய, தனக்கில்லை; தான் அதை கடைப்பிடிக்கத் தேவையில்லை என்பதான முதலாளித்துவ பாணி சிந்தனை அதிகார தொனி இருக்கும். ஆனால், பெண்கள் எழுதும்போது தன்னிலிருந்து தொடங்கி, தான் சொல்பனவற்றில் தான் இருக்கிறோமா என்பதையும் எண்ணியே சொல்பவர்களாக இருக்கிறார்கள் என்பது நல்ல விஷயம்.
கனலி, அன்றாட வாழ்வில் தான் சந்திக்கும் மனிதர்களில் - அவர்கள் ஆணோ, பெண்ணோ அவர்களிடம் தான் காணும் ஆணாதிக்கப் போக்கை தனக்கேயுரிய பாணியில் விமர்சித்து எழுதியுள்ளார். எளிய சொல்லாடல்களில், சக மனிதர்களின் தோளணைத்து, அக்கறையுடன் பகிர்ந்த அன்றாடம் மனிதர்கள் சந்திக்கிற பிரச்னைகளுக்கானத் தீர்வுகளைச் சொல்லியிருக்கிறார். தொகுப்பில் நான் மிகவும் ரசித்த கட்டுரை ‘பிரியமான புரிதல்’. கனலி’க்கு அன்பும் வாழ்த்துகளும்!
- பிருந்தா சேது, எழுத்தாளர்
கனலி
தமிழ் மீதான ஆர்வமே இவரை எழுத்தாளராக மாற்றியது. ‘சிலரையாவது சிந்திக்க வைப்பதே என் எழுத்தின் வெற்றி’ என்கிற கனலியின் இயற்பெயர் சுப்பு. கவிதைகள், கதைகள் எழுதுவதற்கு ’தேஜஸ்’. பெண்களின் பிரச்னைகளைப் பேசுவதற்கு ‘கனலி’.
அன்பான கணவனும் மகளும் கொண்ட அழகான குடும்பம். ‘என் முதல் வாசகியே மகள்தான் என்பதால் எனக்கு கூடுதல் பொறுப்பு உள்ளது’ என்கிற கனலிக்கு எம்பிராய்டரி, புடவை பெயின்டிங், குரோஷா, சிலம்பம் போன்ற துறைகளிலும் ஆர்வமும் நிபுணத்துவமும் உண்டு.