விடுதலை வேள்வியில் தன்னையே எரித்துக்கொண்ட பெண்களில் எண்ணிக்கை கணக்கிலடங்காதது. பன்னிரெண்டு வயதில் கொடியேற்றச் சென்று உயிர்விட்ட சிறுமி தொடங்கி, எதிரிகளை துப்பாக்கி முனையில் சிறைபிடித்த பெண்கள் வரை இந்தத் தொகுப்பு வரிசை பல ஆச்சரியங்களைத் தாங்கி நிற்கிறது. இவர்களில் காந்தியம் பேசிய பெண்களும் உண்டு, பொதுவுடைமைச் சித்தாந்தத்துக்காக ஆயுதம் ஏந்தியவர்களும் உண்டு. இப்பெண்களின் வாழ்க்கைக் கதைகள் நமக்கு என்றென்றைக்குமான படிப்பினை.
‘வரலாற்றை நினைவில் நிறுத்தாதவர்கள் அதையே மீண்டும் செய்ய விதிக்கப்பட்டவர்கள்’ என எழுதியிருக்கிறார் ஸ்பானிய அமெரிக்க தத்துவவியலாளர் ஜார்ஜ் சந்தயானா. நம் எதிர்காலத்தில் இருண்ட கடந்த காலத்தின் நிழல் விழாமல் தப்ப, வரலாற்றை வாசிப்பதும் புரிந்துகொள்வதும் அது சுட்டும் தவறுகளை சரிசெய்வதும் அவசியமாகிறது. ஆனால், வரலாற்றை ஆவணப்படுத்துவதிலும் முறையே தொகுப்பதிலும் நாம் ஆண் விடுதலைப் போராட்ட வீரர்களுக்குத் தந்த முக்கியத்துவத்தை நம் வீர மகளிருக்குத் தரவில்லை என்பது உண்மையே. வரலாற்றின் பக்கங்களில் மறைந்துபோன இந்த வீர மகளிரின் சுருக்கமான வாழ்க்கைச் சித்திரங்களைத் தேடிக் கண்டெடுத்து, கோத்து, தொகுப்பாக்கி வருங்காலத் தலைமுறையினர் கைகளில் தவழவிட்டிருக்கிறோம்.
உமா மோகன்
புதுச்சேரியில் வசிக்கும் ஊடகவியலாளர் உமா மோகன் (அகில இந்திய வானொலி அறிவிப்பாளர்) மாணவர்களுடனும் மகளிருடனும் இயங்குவதில் விருப்பம் கொண்டவர். 12 கவிதைத் தொகுப்புகள் உள்பட இவரது பல நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது சிறுகதைத் தொகுதிக்காக கலை இலக்கிய பெருமன்ற விருதினையும், கவிதைகளுக்காக சௌமா அறக்கட்டளை உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றவர். புதுச்சேரி அரசின் கம்பன் புகழ் இலக்கிய விருது வென்றவர்.