இளவயதில் பசுமரத்தாணி போல் பதிந்தவற்றைப் பதிவாக்கிவிடும் பரவச எழுத்துநடை இவருடையது. வானொலி, சைக்கிள், சினிமா டூரிங் டாக்கீஸ், பனைநுங்கு, கொண்டைமுடி கட்டுநர், உப்பு வணிகர், பல்லாங்குழி தாயம், தட்டாங்கல், பாண்டியாட்டம், புத்தக வாசிப்புச் சாலை, சீட்டிப் பாவாடையும் உடை வகைகளும், கம்மல் மூக்குத்தி கருத்தணிகள், வெத்திலைப் பெட்டி, முறம் என்ற சுளகு, கூஜா, பனைநார்ப் பெட்டி என்று ஒவ்வொன்றாக நினைவுகளில் நனைந்து விளக்கிவிடுகிறார்.
கள்ளிகுளம் மக்களிடம் புழங்கும் மொழி, வட்டார வழக்கு, பண்பாட்டுச் செயல்கள் பல தலைமுறை கடந்தும் நிற்கும்; நாடுகள் பல கடந்தாலும் நிலைக்கும். மொத்தத்தில் இளைய தலைமுறைகள் தெரிந்துகொள்ள வேண்டிய பண்பாட்டுப் பதிவுகளைப் பெரிய நூலாகத் தந்த பாரதி பாராட்டுக்குரியவர். பண்பாட்டுச் சுவடுகளைப் பாதுகாத்துப் பதிவு செய்த பல்துறை வித்தகர் பாரதி திலகர் பல்லாண்டு வாழ்க!
- முனைவர் தாயம்மாள் அறவாணன்
பாரதி திலகர்
தென் நெல்லையில் கள்ளிகுளம் என்ற சிறிய ஊரில், நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். தொடக்கக் கல்வி முதல் பி.காம் வரை உள்ளூரிலேயே படித்தவர். தொலைதூரக் கல்வியாக எம் காம்.
இவரின் தந்தை பா.அமிழ்தன், எழுத்தாளர். அம்மா மதலேன் குடும்பச் சூழ்நிலையினால் பணியிலிருந்து விருப்ப (விருப்பமில்லா) ஓய்வுபெற்ற தொடக்கப் பள்ளி ஆசிரியர்.
கணவர் திலகர். அமெரிக்காவில் மென்பொருள் நிறுவனப் பணியாளர். கணவரின் பணி நிமித்தமாகக் கடந்த 16 ஆண்டுகளாக அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோவில் வசிக்கிறார்.
‘ஹெர் ஸ்டோரிஸ்’ தளத்தில் இணையத் தொடராக வருகையில் பெரும் வரவேற்பைப்
பெற்ற நினைவலைகளின் தொகுப்பே பாரதி திலகரின் முதல் நூலாக மலர்ந்திருக்கிறது.