கவிஞராக, சிறுகதை ஆசிரியராக, தம் ஆழமான எழுத்தில் அழுத்தமாக அறியப்பட்டவர். வானொலியில் இந்த மகளிர்களைப் பற்றி பேச ஆரம்பித்து, இதை தன் வாழ்நாளின் சிறப்புப் பணியாக ஏற்றுக்கொண்டு வரலாற்று ஆவணமாக, நம் பெண்களின் வாழ்க்கைச் சித்திரத்தை நம் கண்முன்னே எடுத்து வைக்கிறார். அவருடைய எழுத்தில், அவர் தேடித் தேடி சேகரித்து ஆவணப்படுத்திய இந்தக் கட்டுரைகளை - நம் வீரம் செறிந்த விடுதலைப் பெண்களின் வாழ்க்கைக் குறிப்புகளை வாசிக்கையில், உள்ளம் அதிர்ந்து, மேனி சிலிர்க்க, கண்கள் பொழிய விம்மி விம்மி பதைபதைத்து சோர்ந்து பின்பு உயிர்த்தெழுந்து எப்பேர்ப்பட்ட பூமியில் பிறந்திருக்கிறோம் என்னும் பேருவகை கொள்கிறோம். நம் உயிர் இருக்கும் மீதி நாட்களிலே இன்னும் நம் நாட்டுக்கு ஏதேனும் செய்து விடமாட்டோமா என்னும் ஆதங்கம் எழுகிறது.
இதோ இந்த ஐம்பது பெண்களின் வீரம் நிறைந்த தியாக வாழ்க்கை நிகழ்ச்சிகளில் அவர்களுடன் அந்தக் காலத்துக்கு சென்று வரலாம். அந்த வேட்கையை மீளுருவாக்கம் செய்யலாம்.
உமா மோகன்
புதுச்சேரியில் வசிக்கும் ஊடகவியலாளர் உமா மோகன் (அகில இந்திய வானொலி அறிவிப்பாளர்) மாணவர்களுடனும் மகளிருடனும் இயங்குவதில் விருப்பம் கொண்டவர். 12 கவிதைத் தொகுப்புகள் உள்பட இவரது பல நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது சிறுகதைத் தொகுதிக்காக கலை இலக்கிய பெருமன்ற விருதினையும், கவிதைகளுக்காக சௌமா அறக்கட்டளை உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றவர். புதுச்சேரி அரசின் கம்பன் புகழ் இலக்கிய விருது வென்றவர்.