ராஜம் கிருஷ்ணன் தான் எழுதிய சிறுகதைகளில் பெண் விடுதலைச் சிந்தனைகளை ஆழமாக முன் வைத்துள்ளார். ஆனால், அவர் படைத்த பெண்கள் தங்கள் இலக்கில் வெற்றியடைந்தார்கள் என்று கூறமுடியாது. என்றாலும் அவர் சிறுகதைகளின் வாயிலாக, அடிமைத் தளையில் முடங்கிக் கிடந்த பெண்ணினம் விழிப்படைய, தொடர்ந்து முயற்சிகள் செய்துள்ளார் என்பதை மறுக்க இயலாது. ராஜம் கிருஷ்ணன் பேசிய பெண் விடுதலை மரபு வழிபட்ட தமிழ்ப் பண்பாட்டுக் கட்டுமானங்களை அடியோடு தகர்க்கவில்லை என்றாலும், அதனை அசைத்துப் பார்த்தது என்பதை உறுதியாகக் கூற முடியும்.
பேராசிரியர் இரா.பிரேமா
பேராசிரியர் இரா. பிரேமா எழுத்தாளரும், பெண்ணிய ஆர்வலரும், ஆய்வாளரும் ஆவார். இவர் சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரி தமிழ்த் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். கொரட்டூர் பக்தவத்சலம் மகளிர் கல்லூரியில் நான்கு வருடங்கள் முதல்வராகப் பணியாற்றினார். இருபத்தைந்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் பல தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களிலும் பாண்டிச்சேரி மையப் பல்கலைக்கழகத்திலும் முதுகலை, இளங்கலை வகுப்புகளுக்குப் பாட நூல்களாகவும் ஆய்வு மாணவர்களுக்கு நோக்கு நூல்களாகவும் உள்ளன. சாகித்ய அகாதெமிக்காகப் பெண் மையச் சிறுகதைகள் என்கிற தலைப்பில் ஒரு நூற்றாண்டுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தொகுத்துத் தந்துள்ளார். ஹெர் ஸ்டோரிஸுக்காக நூற்றாண்டு கண்ட பெண் இலக்கிய ஆளுமைகள், நூறு பெண்கள் நூறு சிறுகதைகள் ஆகிய நூல்களைத் தொகுத்துள்ளார்.